புதன், 31 ஜூலை, 2019

திருவையாறு ஆடி அமாவாசை திரு அப்பர்க்கு இறைவன் திருக்கயிலை திருக்காட்சி அளித்த நிகழ்ச்சி


திருவையாறு ஆடி அமாவாசை  திரு அப்பர்க்கு இறைவன் திருக்கயிலை திருக்காட்சி அளித்த நிகழ்ச்சி நேரடி ஓளிபரப்பு  9.00pm
31/07/2019


திருநாவுக்கரசர்[அப்பர் சுவாமிகள்] தொண்டில் பழுத்த சைவர்…வெறுமனே வாயால் மட்டுமே பாடிக் கொண்டு இருக்காமல், கைகளாலும் உழவாரத் தொண்டு செய்தவர்….. தன்னுடைய இறுதிக் காலத்தில், திருக்கயிலாயத்தில் வீற்றிருக்கும் ஈசனைக் காண, ஆவல் வந்து விட்டது! கிளம்பி விட்டார் வடநாட்டுக்கு! 

திருக்காளத்தி, திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) எல்லாம் கடந்து ஒரேயடியாக, வடக்கே காசி வரை வந்து விட்டார்! கூட வந்தவர்களால் முடியவில்லை! அப்பரின் மனமோ ஓயவில்லை! அனைவருக்கும் விடைகொடுத்து விட்டு, தான் மட்டும் தனியாகக் கயிலை யாத்திரைக்கு நடக்கத் தொடங்கி விட்டார்!

வழியில் கிடைத்த இலை, சருகு, கிழங்கு, பழங்கள் மட்டுமே உண்டு, சில சமயம் அதனையும் தவிர்த்து இரவு பகலாக திருக்கயிலாயத்தை நோக்கித் தனது பயணத்தை மேற்கொண்டார் திருநாவுக்கரசர்.  ஒரு நிலையில் அவரின் பாத தசைகள் தோய்ந்து போயின. மணிக்கட்டுகள் மறத்துப் போயின. அப்போதும் இறைவன் மீது கொண்ட பக்தியால் உறுதி தளராமல், வைராக்யத்துடன் மார்பினால் உந்தியும், உடலால் புரண்டும் சென்று கொண்டிருந்தார்..

கால்களால் நடக்க முடியாது, கைகளால் தவழ்ந்தார்! அதுவும் முடியாது, தலையால், உடலால் ஊர்ந்தார்! அதுவும் முடியாது, என்ன செய்வதென்றே தெரியவில்லை! அப்பரை சோதிக்க எண்ணிய சிவபெருமான் ஒரு முனிவர் வடிவில் அவருக்கு எதிரே தோன்றினார். ""

மானிடர்கள் உடலோடு திருக்கயிலாயம் சென்று ஈசனைக் காண்பது மிகவும் அரிது அப்பரே! உங்கள் தொண்டே போதும்! யாத்திரையைக் கைவிட்டு விடுங்கள் என்று பேசி பார்ததான் ஈசன்...நாவுக்கு அரசர், இப்போது செவிக்கும் அரசர் ஆகி விட்டார் ..இதற்க்கு செவி மடுத்தாரில்லை! “அப்பரே, இப்படி ஒரு உறுதியா? கயிலை அடிவாரத்தில் வாழும் முனிவன் நான்! எனக்கே ஈசன் தரிசனம் அவ்வளவாகக் கிடைப்பதில்லை! உங்களுக்கு எப்படி கிடைக்கும் என்றார்..

ஆனால் அப்பர் பெருமானோ, ""ஆளும் நாயகன் கயிலையில் இருக்கைக் கண்டு அல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்'' என்று பதிலுரைத்து உறுதியுடன் தனது யாத்திரையைத் தொடர்ந்தார்.

அப்பரின் வைராக்யத்தை மெச்சிய முனிவர் வடிவம் கொண்ட ஈசன் , ""ஓங்கும் நாவினுக்கு அரசனே! எழுந்திரு!  இப்போதாவது நான் சொல்வதைக் கேட்பீர்களா? இதோ, இந்தத் தூய ஏரியில் மூழ்குங்கள்! பஞ்ச நதி க்ஷேத்திரம் என்னும் திரு-ஐ-ஆற்றில் (திருவையாறு) எழுவீர்கள்! அது தட்சிண கைலாசம்! அங்கு இறைவனைத் திருச்சபை சூழக் காண்பீர்கள்”..என அருளி மறைந்தான் ..

ஈசன் அடி தொழுத அப்பர் மானசரோவரத்தில் மூழ்கினார்! ஊன் உடற் புண்கள் எல்லாம் மறைந்தன!உடல் சிவ மங்களமாய் மின்னியது! வட மலையில் மூழ்கியவர், தென் கயிலாயமான திருவையாற்றில் எழுந்தார்! மும்மூர்த்திகளும் சூழ்ந்திருக்க, தேவரும், மூவரும், ஏவரும் துதிக்க, நடன மாதர் நடங்கள் புரிய, கங்கை முதலான ஆறுகள் வணங்க, நந்தி தேவர் திருக்கடைக்காப்பில் நிற்க, மின்னிடும் வெள்ளிப் பனி மலையாய் அம்மையும் அப்பனும்…அப்பருக்குத் திருக்கைலாயம் காட்சி ஆகிறது!


புகுவார் பின் புகுந்தால், அடியார் பின் புகுந்தால், அன்பினால் புகுந்தால், அந்த அன்பே சிவமாகும்! அன்பர் கூடுமிடம் கயிலையாகும்!….அப்பர் திருவையாறில் கண்ட திருக்கைலாய தரிசனம் நடந்த நாள்  ஆடி அமாவாசை அன்று..

இதை நினைவு கூரும் விதத்தில் ஆடி அமாவாசையன்று “திருவையாறு ஐயாறப்பர் சன்னிதியில்” இந்த நிகழ்ச்சி கயிலைக்காட்சி விழாவாக அதிவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.


தென்னாடு உடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி சீரார் திருவையாறா போற்றி! போற்றி!!







நன்றி வேந்தர் டிவி
தருமை ஆதினம்





ஶ்ரீ வள்ளி ஜோதிட நிலையம்
0091-8939791843
Whatsapp

1 கருத்து: