ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

இன்று 16-04-2017 வராக ஜெயந்தி கல்லிடைக்குறிச்சி திருக்கரந்தை ஆதிவராகர்

கல்லிடைக்குறிச்சி திருக்கரந்தை ஆதிவராகர்

     







சாப விமோசனத்திற்காக பூமிக்கு வந்த குபேரன், ஈசனை பல தலங்களில் தரிசித்து வந்த 







வேளையில், ஆதிவராகரை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து பேறு பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.

மூலவர் ஆதிவராகராகவும் உற்சவர் லட்சுமிபதி எனும் திருப்பெயருடனும் தாயார் பூமாதேவியுடன் திருவருள் புரியும் திருத்தலம் இது.

குபேரன் வராகமூர்த்தியை பிரதிஷ்டை செய்தபோது யாக பாத்திரங்கள் கல்லாய் மாறின. அதனால் இவ்வூர் சிலாசாலிபுரம் என்றானது. அதனால் ரிஷிகள் இங்கு தவம் செய்ய ருசி (ஆசை) கொண்டதால் ‘குருசி’ எனப்பட்டது. சிலாசாலிகுரிசி - கற்கள் குவிந்த, யாக ருசி மிகுந்த ஊர் எனும் பொருள்படும்படி. இதுவே ‘கல்லிடைக்குறிச்சி’யாயிற்று.

தல தீர்த்தமாக தாமிரபரணி ஆறு விளங்கும் இத்தலத்தில் வைகானஸ ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெறுகிறது. 

திருக்கரந்தை, கல்யாணபுரி என புராணங்களில் இத்தலம் அழைக்கப்படுகிறது.

குபேரன் பிரதிஷ்டை செய்த மூர்த்தி காலப்போக்கில் பூமியில் புதையுண்டது. ஒரு பக்தரின் கனவில் பெருமாள் தோன்றி தான் இருக்கும் இடத்தை அறிவித்து ஆலயம் எழுப்ப ஆணையிட அதன்படி இத்தலம் எழுப்பப்பட்டது. 

கருவறையில் பத்ம பீடத்தில் அமர்ந்த நிலையில் இடது மடியில் பூமா தேவியை தாங்கிய நிலையில் பெருமாள் தரிசனமளிக்கிறார்.

எப்போதும் தாயாருடன் சேர்ந்தே இருப்பதால் இவரை நித்ய கல்யாணப் பெருமாள் என்று அழைக்கின்றனர்.




திருமண வரம் வேண்டுவோர்க்கு தட்டாமல் அவ்வரத்தை அருள்வதால் இத்தலம் கல்யாணபுரி என்று அழைக்கப்படுகிறது. 

சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதரால் இத்தல வராகர் பாடப்பெற்றிருக்கிறார்.

ஆலய பிராகாரத்தில் ஒரு புறம் ஸ்ரீதேவி சந்நதி கொண்டிருக்கிறாள்; மறுபுறம், வழக்கமாக ஆண்டாள் இருக்க வேண்டிய சந்நதியில் பூதேவி வீற்றிருப்பது இத்தல சிறப்பு. 

தாயார் சந்நதியருகே அற்புதமான தசாவதார சிலைகளைக் கண்டு மகிழலாம்.

வெளிப் பிராகாரத்தின் தென்புறத்தில் சாஸ்தா மண்டபமும் வடகிழக்குப் பகுதியில் தர்மசாஸ்தா சந்நதியும் உள்ளது வைணவ தலத்தில் அபூர்வமாகக் காணக் கிடைக்கக்கூடியது.

பிரார்த்தனை நிறைவேறியவர்கள் பெருமாளுக்கு கருடசேவை உற்சவம் நிகழ்த்தி தம் நன்றிக் கடனை செலுத்துகின்றனர். அதனால் இத்தலத்தில் அடிக்கடி கருட சேவையில் பெருமாளை தரிசிக்கலாம்.

கருவறை விமானத்தில் சயனப்பெருமாளை தரிசிக்கலாம். பிருகு, மார்க்கண்டேய மகரிஷிகளுடன் காட்சியளிக்கும் இவருக்கு வராகமூர்த்திக்கு பூஜை செய்த பின் காலையில் பூஜை செய்யப்படுகிறது. அப்போது மட்டுமே இவரை தரிசனம் செய்யலாம்.

ஆலய மேற்புற சுவரில் வீற்றுள்ள மூலை கருடாழ்வாருக்கு ஆடி மாத சுவாதி நட்சத்திர தினத்தன்று விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அன்று கருடபகவானை புஷ்பாங்கியில் தரிசிக்கலாம்.

இத்தல பெருமாளுக்கு தாமிரபரணி தீர்த்தத்தால் மட்டுமே திருமஞ்சனம் செய்யப்படுகிறது. தினமும் ஆலய பட்டாச்சார்யார் மேளதாளங்கள் முழங்க தாமிரபரணி நதிக்குச் சென்று திருமஞ்சனத்திற்கான தீர்த்தத்தை எடுத்து வருவார்.

நிலம் சம்பந்தமான பிரச்னைகள் தீரவும் கடன்கள் தீர்ந்து செல்வ வளம் பெருகவும் ஆதிவராகர் அருள்வதாக பக்தர்கள் நம்புகின்றனர். 

பெருமாளுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வதும் விசேஷ திருமஞ்சனம் செய்வதும் ஆலயத்தின் சிறப்பு மிக்க வேறு இரு வகை பிரார்த்தனைகள்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் கல்லிடைக்குறிச்சி உள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக