ஞாயிறு, 22 ஜூன், 2014

சரஸ்வதியின் சிறப்பும் வழிபாடும்!

 

சரஸ்வதி  


சரஸ்வதிக்கு ஞான சரஸ்வதி, ஆகமச் செல்வி, ஆகமசுந்தரி, ஞானச்செல்வி என்று பல பெயர்கள் உண்டு. சரஸ்வதியை வேதங்கள் அன்னத்தின் மீது அமர்ந்திருப்பவளாகப் போற்றுகின்றன. அன்ன வாகனத்துடன் உள்ள சரஸ்வதியை அம்சவல்லி என்பர். அன்னம், அப்பழுக்கற்ற வெண்மை நிறமுடையது. அதுபோல், ஒருவர் கற்கின்ற கல்வியும் மாசு மருவற்றதாக இருக்க வேண்டும் என்பதையும், படித்தவர்கள் வெள்ளை மனதினராக இருக்க வேண்டும் என்பதையும் குறிக்கிறது. அவளது வெள்ளைப்புடவை, அவள் அமர்ந்துள்ள வெள்ளைத் தாமரை ஆகியவையும் இதையே உணர்த்துகின்றன. தென்னகத்தில் கலைமகளை மயில் வாகனம் கொண்டவளாகப் போற்றுகின்றனர். ரவிவர்மாவின் ஓவியங்களில் சரஸ்வதிக்கு மயிலே வாகனமாக குறிக்கப் பட்டுள்ளது. மயில் தோகை விரிப்பதும், மடக்கிக் கொள்வதும் ஒருவன் கற்ற கல்வி பரந்து விரிந்ததாக இருக்க வேண்டும் என்பதையும், அவனுக்கு அடக்கம் வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது.

சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை: தெட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலையும், சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை நைவேத்யமும் முக்கியம். இதற்கு காரணம் என்ன தெரியுமா? சரஸ்வதி,தெட்சிணாமூர்த்தி இருவருமே ஞானத்தை அருள்பவர்கள். இருவருமே ஜபமாலை, ஏட்டுச்சுவடிகளை ஏந்தியுள்ளனர். மனத்தூய்மை, சாந்தம், மெய்ஞானம் ஆகிய உயர்குணங்களை உணர்த்தும் வகையில் ஸ்படிக மாலை, ஜடாமகுடம், சந்திரக்கலை ஆகியவற்றை இருவரும் பெற்றிருப்பதைக் காணலாம். கொண்டைக் கடலை உ<யிர் காக்கும் சத்துக்களைக் கொண்டது. ஒருவரது ஜாதகத்தில் குரு பலம் இல்லையென்றால், அவரது <<உயிருக்கு பாதகம் வரலாம். எனவே, குரு பார்வை வேண்டி நவக்கிரகங்களில் குருவுக்கும், குருவின் அம்சமான தெட்சிணாமூர்த்திக்கும் கொண்டைக்கடலை மாலை படைத்து தீர்க்காயுள் கிடைக்க வேண்டுகின்றனர். மனித வாழ்வின் உயிர்நாடி கல்வி. அந்த <கல்வியில் சிறந்து விளங்க, சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை (சுண்டல்) நைவேத்யம் செய்கிறோம்.
சொல் கிழவியைத் தெரியுமா?
ஒட்டக்கூத்தர் கலைமகளின் பக்தராக விளங்கினார். நாமகளின் அருளால் பாடும் திறம் பெற எண்ணினார். இதற்காக ஹரிநாதேஸ்வரம் என்னும் கூத்தனூரில் ஓடும் அரசலாற்றில் நீராடி கலைவாணியின் திருவடிகளை சிந்தித்து தியானத்தில் ஆழ்ந்தார். கலைவாணி அவர் முன் தோன்றி, தன் வாயிலிருந்த தாம்பூலத்தை (வெற்றிலை) கூத்தருக்கு கொடுத்தாள். அப்போதிருந்து பேரறிவும், ஞானமும் பெற்றார் ஒட்டக்கூத்தர். கூத்தருக்கு கலைமகள் காட்சி கொடுத்து அருளிய திருத்தலம் என்பதால் கூத்தனூர் என்ற பெயர் ஏற்பட்டது. தாம் பாடிய தக்கயாகப்பரணியில் இத்தேவியை ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழியே என்று பாடியிருப்பது இவரின் பக்தியை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. கிழத்தி என்பதற்கு கிழவி என்றும், தலைவி என்றும் பொருளுண்டு. சொல்லுக்கு (வாக்கு) தலைவி என்பதால் இவளை ஒட்டக்கூத்தர் இப்பெயரிட்டு அழைத்தார். இவளுக்கு வாக்தேவி என்றும் பெயருண்டு.
கல்விக்கோயில்: சிவபெருமானை அலட்சியப்படுத்தும் விதமாக தட்சன் ஒரு யாகம் நடத்தினான். சிவன், தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். அவர், யாகத்தை அழித்ததுடன், யாகத்தை முன்னின்று நடத்திய பிரம்மதேவனையும் தண்டித்தார். மேலும், அவரது மனைவியான கலைமகளின் மூக்கினையும் அரிந்தார். பயந்து நின்ற அவள் தன் கணவன் பிரம்மனுடன் சீர்காழிக்குச் சென்று சிவனை வழிபட்டாள். இந்த நிகழ்ச்சியை திருஞானசம்பந்தர், நாவினாள் மூக்கரித்த நம்பர் என்று குறிப்பிடுகிறார். மேலும், நாவியலும் மங்கையொடு நான்முகன் தான் வழிபட்ட நலங்கோயில் என்றும் பாடியுள்ளார். சீர்காழி ஒரு கல்வித்தலம் ஆகும். மாணவர்கள் ஒருமுறையேனும் சீர்காழி சென்று, அங்கு அருள்புரியும் தோணியப்பரையும், அம்பாளையும், திருஞானசம்பந்தரையும் வணங்கி வந்தால் கல்வியில் சிறப்பிடம் பெறலாம். இவ்வூரில் அவதரித்த சம்பந்தருக்கு, இத்தலத்தில் தான் அம்பிகை தாயாக இருந்து பால் புகட்டினாள்.

ராகு-கேது தோஷங்கள் நீங்க, அனைத்து நலன்களும் பெருக பலன் தரும் ஸ்லோகம்


அர்த்தகாயம் மஹாவீர்யம் சந்த்ராதித்ய விமர்தனம்
ஸிம்ஹிகாகர்ப்ப ஸம்பூதம் தம் ராஹும் ப்ரணமாம்யஹம்
பலாசபுஷ்ப ஸங்காசம் தாரகாக்ரஹமஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்
நவகிரக ஸ்தோத்திரம்.


பொதுப்பொருள்:
பாதி (மனித) சரீரமுள்ளவரே, மகா பலசாலியானவரே, சந்திர-சூரியனையே மறைப்பவரே, ஸிம்ஹிகையின் கர்ப்பத்தில் பிறந்தவரே, ராகு பகவானே நமஸ்காரம். பலாச மலர் போன்றவரே, நட்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்கும் தலைவரானவரே, கோபம் மிக்க உருவம் கொண்டவரே, அநீதிக்கு அச்சமூட்டுபவரே, கேது பகவானே, நமஸ்காரம்.

புதன், 11 ஜூன், 2014

செந்தமிழ்நாட்டின் சொந்தக்கடவுள் முருகன்.


செந்தமிழ்நாட்டின் சொந்தக்கடவுள் முருகன். மலையும், மலை சார்ந்த பகுதியுமான குறிஞ்சி நிலப்பகுதியின் தலைவன் முருகனே. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று குவலயத்தோர் வழிபட்ட வரலாறு சங்க இலக்கியங்கள் பல இடங்களில் சொல்கின்றன. முருகவேளுக்கு உரிய மந்திரமாக சடாச்சரம் (ஆறெழுத்து) விளங்குகிறது. அது சரவணபவ என்னும் உயரிய மந்திரமே. முருகப்பெருமானுக்குரிய விரதங்களில், செவ்வாய், சஷ்டி, மற்றும் கிருத்திகை விரதங்கள் முக்கியமானவை. உலகெங்கும் குமாரக்கடவுளுக்கு கோயில்கள் இருந்தாலும், தமிழ்நாட்டில் உள்ள அறுபடை வீடுகளும் மிக சிறப்பானவை. முருகனின் சிறப்பான செயல்களை விளக்கும் வண்ணம் அமைந்தவை அறுபடை வீடுகள். 

1. தந்தைக்கு மந்திரம் சொன்ன சுவாமிமலை
2.பழம் வேண்டி ஆண்டியாய் நின்ற பழனி மலை
3. சூரபத்மனை போரிட்டு வென்ற திருச்செந்தூர்
4.சினம் தணிந்து தேவயாணியை திருமணம் புரிந்த திருப்பரங்குன்றம்
5.குறமகள் வள்ளியை திருமணம் புரிந்த திருத்தணிகை
6.இருதேவியரோடு அருளாட்சி புரிந்து வரும் பழமுதிர்சோலை என்பவை அறுபடை வீடுகளாம்.

சிவனாருக்கும், அன்னை உமைக்கும் இடையே சிறுகுழந்தையாய் குமரக்கடவுள் வீற்று இருக்கும் சோமாஸ்கந்த வழிபாடு, மற்றும் விழா புறப்பாடு தமிழகத்தில் மிகப்பழமையானதும், சிறப்பானதுமாகும்.

உற்சவர் மயில் மீது வள்ளி,தேவசேனா தேவியரோடு வரும் அழகு காட்சியாகும்.

பாரத தேசம் மட்டுமின்றி, இலங்கையின் கதிர்காமம், நல்லூர்,மாவிட்டபுரம்,பகுதிகளிலும், மலேசிய, சிங்கப்பூர் நாடுகளிலும் முருக வழிபாடு வெகு சிறப்பானது.

தமிழர் எங்கெல்லாம் இருக்கின்றார்களோ, அங்கெல்லாம் முருகனுக்கு கோயில் உண்டென்று சொல்லலாம்.

செவ்வாய், 10 ஜூன், 2014

வீரபத்திரன் - வினைகளை கொல்பவன்

தனது தந்தை தட்சன் செய்யும் வேள்வியினை பற்றி கேள்வியுற்ற தாட்சாயணி அவனது தவறை எடுத்துக் கூறி திருத்தும் பொருட்டு கணவரான ஈசனிடம் அனுமதி பெற்று வேள்விச் சாலையை அடைந்தாள். தாட்சாயணியை கண்டதும் கொடிய வார்த்தைகளால் இகழ்ந்தான் தட்சன்.

இதனால் கோபம் அடைந்த தாட்சாயணி கயிலை திரும்பி, தட்சனுக்கு அறிவூட்டும் வகையில் அந்த யாகத்தை அழிக்கும்படி பெருமானிடம் வேண்டினாள். இதனால் ஈசன் அவரது கண்டத்திலிருந்த ஆலகால விஷத்தின் ஒரு பங்கு அவரது நெற்றிக் கண் வழியே சிவா உருவாய் வெளிப்பட்டது. அந்த வடிவம் ஆயிரம் முகங்களும் இரண்டாயிரம் கரங்களும் அவற்றிற்கு ஆயுதங்களும் கொண்டவனாய் இருந்தான். கபால மாலைகள், மணி மாலைகள், ஆமை ஓட்டு மாலைகள், பன்றிக் கொம்பு மாலைகள் ஆகியவற்றை தாங்கி, சிங்க முகங்களை கோர்த்த பாம்பாலான ஆடை அணிந்திருந்தான். இவனே வீரபத்திரன் என அழைக்கப்பட்டான்.

சிவபெருமானின் திருவுருவான வீரபத்ரனும், அன்னையால் உருவான பத்ரகாளியும் தட்சனின் யாகத்தை அழித்த விதம் புராணங் களில், இலக்கியங்களில் உள்ளன. வீரபத்திரன் ஆலயங்கள் அநேகமாக வடக்கு நோக்கியே உள்ளன. மேற்கரங்களில் வில்லும், அம்பும் ஏந்தி, கீழ் வலது கரத்தில் வாளும், இடது கரத்தில் பெரிய கேடயத்தையும் கொண்டு காட்சி தரும் இவரின் தலையின் முன் உச்சியில் சிவலிங்கம் காணப்படுகிறது.

ஸ்ரீ வீரபத்ரர் காயத்ரீ.


ஓம் தீக்ஷ்ணதேஹாய வித்மஹே
பக்தரக்ஷாய தீமஹி
தந்நோ வீரபத்திரஹ் ப்ரசோதயாத்.

108 தாண்டவபேதங்கள்

108 தாண்டவபேதங்கள்


பேரூழி காலத்தே பெருமான் எல்லா ஜீவராசிகளையும் தன்னுள் அடக்கி ஓய்வு கொள்ள செய்கிறார். ஒவ்வொரு ஜீவன்களின் வினைப்பயனையும் தொலைத்தல் வேண்டும், கரைக்க வேண்டும், அதற்கு இன்னும் பல பிறவிகள் எடுத்தல் வேண்டும். என்ன செய்வது என்று ஈசனார் எண்ணுகின்றார். வழி பிறக்கிறது, ஆனந்தம் தொடர்கிறது, இறைவனார் மெல்ல கால் உயர்த்தி ஆடத்தொடங்குகிறார். பரந்த வெளி விரியத் தொடங்குகிறது. சப்தம் எழ சலனம் எழுகிறது. சலனம் எழுந்ததால் ஆக்கல் எழுகிறது, அதனால் அருளல், அருளியதால் காத்தல், காத்தலை தொடர்ந்து மறைத்தல், பின் அழித்தல் என ஐந்தொழிலும் அழகாய் நாட்டியத்தோடே நடை பெறுகிறது.

பரவிய பெருவெளிஎங்கும் பரமனின் திருக்கூத்து நடக்கிறது. அதில் பிரபஞ்சம் தோன்றுவதும் அழிவதும் தொடர்கிறது. ஈசனின் ஆட்டம் ஊழிக்காலம் வரை இடைவிடாது தொடர்வதால் உயிர்களின் இயக்கம், பஞ்சபூதங்களின் மாறுதல் கதி மாறது சுழல்கிறது. சீரான பாவ, ராக, தாளத்தோடு ஆடும் நாயகனின் அற்புத திருக்கோலமே நடராஜர் திருக்கோலம். ஆடவல்லானான நம் பெருமான் ஆட்டுவிக்கும் பொம்மை அன்றோ நாம். அவன் புகழ் பாடி, நடராஜப்பெருமானின் பெருமைகளை இங்கு காண்போம்.

கலைகளில் சிறப்பானது நாட்டியம், மனிதன் உள்ளிட்ட சகல உயிர்களும் மகிழ்ச்சியில், கோவத்தில் இன்னும் பல்வேறு உணர்வுகளில் துள்ளி குதித்த போதோ, கை கால்களை அசைத்த போதோ உருவானதே நாட்டியம். ஆக ஆதிகலையும் நாட்டியமே. அதன் தலைவன் நம் கூத்தபிரான். அம்பலத்தே ஆடும் ஆடல்வல்லான், தான் ஆடியது மட்டுமின்றி தன்னால் உருவாக்கப்பட்ட மானிடர்கள் ஆடி இன்புற, நாட்டிய சாஸ்திரங்களையும் உருவாக்கி உலகிற்கு தந்த வள்ளல். நாட்டிய விளக்கத்துக்கு தாமே ஆடியும் காட்டிய கருணைக்கடல்.

ஏழுவகை தாண்டவங்கள் சிவபெருமானால் ஆடப்பட்ட தாண்டவங்களுக்குள் சிறப்பாக போற்றப்படுகிறது. ஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம், உமா தாண்டவம், கௌரி தாண்டவம், காளி தாண்டவம், திரிபுர தாண்டவம், சங்கார தாண்டவம். இன்னும் தளம் தோறும் ஆடிய அற்புத தாண்டவங்களும், அவைகளில் போற்றப்படும் 108 தாண்டவபேதங்களும் (கரணங்கள்) நாட்டிய உலகின் பொக்கிஷங்கள்.

திங்கள், 9 ஜூன், 2014

ஸ்கந்தர் மூலமந்திரம்




ஸ்கந்தர் மூலமந்திரம்:


விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் 
மொழிக்குத் துணைமுரு காஎனும் 
நாமங்கள்; முன்புசெய்த 
பழிக்குத் துணைஅவன் பன்னிரு
தோளும்; பயந்ததனி
பாதங்கள்; மெய்மைகுன்றா 

வழிக்குத் துணைவடி வேலும் செங்
கோடன் மயூரமுமே.

-கந்தரலங்காரம் -

ஸ்கந்தர் மூலமந்திரம்:

ஓம் ஸ்ரூம் ஸ்கந்தாய நம;

சுப்பிரமணியர் மூலமந்திரம்:
ஓம் ஸௌம் ஸுப்ரமணியாய நம;

குமாரர் மூலமந்திரம்:
ஓம் க்ரூம் குமாராய நம;

குஹர் மூலமந்திரம்:
ஓம் ஸூம் ஸ்வாமி குஹாய நம;

சரவணபவர் மூலமந்திரம்:
ஓம் ஸ்ரீம் சம் சரவணபவாய நம;

ஷண்முகர் மூலமந்திரம்:

ஓம் ஹ்ரீம் ஷம் ஷண்முகாய நம;

வள்ளிதேவி பீஜம்:

ஓம் வ்ரீம் மகாவல்யை நம;

தேவசேனா பீஜம்:

ஓம் ஹ்ரீம் தேவசேனாயை நம;

ஸ்கந்த காயத்ரீ மந்திரம்:

ஓம் கார்த்திகேயாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தந்நஸ்கந்த: ப்ரசோதயாத்

ஞாயிறு, 8 ஜூன், 2014

கங்கைகொண்ட சோழபுரம்


தமிழ்நாடு, அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ளது கங்கைகொண்ட சோழபுரம். தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ஸ்ரீஸ்ரீ ராஜராஜசோழனின் புதல்வன் ராஜேந்திரசோழன், தனது (கி.பி. 1012-1044) ஆட்சி காலத்தில், கங்கை கரை வரை படையெடுத்து சென்று வென்று, பீடு கொண்டதன் அடையாளமாக, கங்கைகொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை உருவாக்கி, அங்கு தஞ்சாவூர் பெரிய கோவில் வடிவமைப்புடன் கூடிய பிரகதீஸ்வரர் கோயிலையும் கட்டினான்.

தமிழகத்திலேயே மிகப் பெரிய சிவலிங்கம் இங்கு தான் உள்ளது. தஞ்சை பெரிய கோயில் லிங்கம் 12.5 அடி உயரமும், 55 அடி சுற்றளவும் உள்ளது. கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் லிங்கம் 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் உள்ளது. ஆவுடையை சுற்றி சாரம் கட்டி, அதன் மீது நின்று பூசை செய்கின்றனர். ஒரே கல்லால் ஆன மூலவர் இங்கு பிரமாண்டமாக காட்சி தருகின்றார். தஞ்சாவூரில் உள்ள லிங்கம் ஆண் அம்சம். இங்குள்ள பிரகதீஸ்வரர் லிங்கம் பெண் அம்சமாகும்.

தஞ்சை உரல் வடிவம். கங்கைகொண்ட சோழபுரம் உடுக்கை வடிவம். இங்குள்ள நந்தியும் தஞ்சாவூரை விட பெரியது. கங்கைகொண்ட சோழபுரம் கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் பதிக்க செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு, வெயில் காலத்தில் வெப்பத்தை குறைத்து சில்லென்ற குளிர்ச்சியை கொடுக்கும். குளிர் காலத்தில் குளிர்ச்சியை குறைத்து இதமான வெப்பத்தை தரும்.

ஐப்பசி பவுர்ணமி தினத்தில் சிறப்பாக அன்னாபிஷேகம் நடந்து வருகிறது. கங்கைகொண்ட சோழபுரம் விஷேசமே ஐப்பசி அன்னாபிஷேகம் தான்.

இத்தலம் திருவிசைப்பாத் தலம் ஆகும்.

இத்தலத்திற்கு - ஒன்பதின்மரில் கருவூர்த்தேவர், திருவிசைப்பா பாடியுள்ளார்.

ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பா திருப்பல்லாண்டுப் பதிகங்கள் - சிவபெருமானின் திருமேனிச் சிறப்பு, அடியார்க்கருளிய அப்பெருமானின் நலங்கள் முதலியவற்றையும் எடுத்துரைப்பதோடு, ஆங்காங்குச் சைவசமயத் தத்துவக் கருத்துக்களையும் புகழ்ந்தோதுகிறது.

160 அடி உயரமுள்ள ஓங்கிய எண்தள விமானம் (கோபுரம்); பல கி.மீ. தொலைவிலிருந்து பார்த்தாலும் காட்சியளிக்கிறது.

இவ்வூர் பண்டை நாளில் புலவர்களால் கங்காபுரி, கங்கைமாநகர், கங்காபுரம் என்றெல்லாம் புகழப்பட்டது.

இத்தலம் தற்பொழுது சிற்றூராக உள்ளது. (இங்குப் பயணிகள் தங்குவதற்கான வசதிகள் ஏதுமில்லை.) பிற்காலச் சோழர்களுக்குத் தலைநகராக விளங்கிய இத்தலைநகரின் பகுதிகளே, இன்றுள்ள 1. உட்கோட்டை, 2. மாளிகைமேடு, 3. ஆயிரக்கலம், 4. வாணதரையன் குப்பம், 5. கொல்லாபுரம், 6. வீரசோழ நல்லூர், 7. மெய்க்காவல்புத்தூர், 8. சுண்ணாம்புக்குழி, 9. குருகைபாலப்பன் கோயில் முதலிய சிற்றூர்கள் ஆகும்.

சோழமன்னர்கள் வாழ்ந்த இடமே 'மாளிகைமேடு' ஆகும்.

சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர் முதலிய பெரு மக்கள் இங்கு வாழ்ந்திருந்தார்கள்.

கலிங்கத்துப்பரணி இங்கிருந்து பாடப்பட்டது. விக்ரமசோழன் உலா, இரண்டாம் குலோத்துங்கன் உலா முதலியனவும் பாடப்பட்டன.

சேக்கிழார் பெரிய புராணம் பாடுவதற்குத் தூண்டுகோலாக இருந்தபதி.

கோயிலமைப்பு தஞ்சைப் பெருவுடையார் கோயிலமைப்பே ஒத்துள்ளது. சிற்பக் கலையழகு சிந்தனைக்கு எட்டாதது. இக்கோயிலில் தற்போது கிடைத்துள்ள கல்வெட்டுக்களில் சிறப்பானது வீரராசேந்திர சோழனது கல்வெட்டாகும். இதிலிருந்து, இக்கோயிலுக்கு விடப்பட்டிருந்த ஊர்களிலிருந்து ஆண்டுதோறும் ஒரு லட்சத்து பத்தாயிரம் கலம் நெல் இக்கோயிலுக்கு அளக்கப்பட்டது என்ற செய்தி தெரிகிறது.

முதலாம் இராசேந்திரன் இங்குள்ள பெருமானுக்குத் தஞ்சைப் பெருவுடையாரின் பெயரையே வைத்து வழங்கினான். மூலவர் சிவலிங்கமூர்த்தி கிழக்கு நோக்கியுள்ளார், பேருருவம் 13 அடி உயரம்; ஆவுடையார் சுற்றளவு 60 அடி - ஒரே கல்லால் ஆனவை; விமானம் 160 அடி உயரம் - 100 அடி சதுரமானது.

மின் விளக்கு இல்லையெனினும், வெளியிலுள்ள பெரிய நந்தியின் மீது படும் ஒளி பிரதிபலித்து, சுவாமி மீது படுவதால் நன்கு தரிசிக்க முடிகிறது.

மூலவர் முன்பு நிற்குங்கால் - வெளியில் கொதிக்கும் வெயிலாக இருந்த போதிலும் - உள்புறம் சில்லென்று குளிர்ச்சியாக இருக்கிறது. இதற்குச் சொல்லப்படும் காரணம், மூலவரின் அடியில் சந்திரக் காந்தக்கல் பதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெப்பக் காலத்தில் வெளியில் கொதிக்கும் வெயிலாக இருக்கும்போது உள்ளே சில்லென்றிருக்கின்றது. இவ்வாறே மார்கழி போன்ற குளிர்காலத்தில் உள்ளே கதகதப்பாக இருக்கின்றது என்று சொல்லப்படுகிறது.

மூலவரை வணங்கியபின் வெளியே வந்து வலமாக வரும்போது பிட்சாடனர், அர்த்த நாரீசுவரர், தட்சிணாமூர்த்தி, நடராசர், சுகாசனர், சண்டேச அநுக்ரஹர், கஜசம்ஹாரர், ஞானசரஸ்வதி முதலிய அருமையான சிற்பமூர்த்தங்களைக் கண்ணாரக் கண்டு மகிழலாம். அரிய சிற்பக் களஞ்சியம் அழகிழந்து நின்று அருமையை பறைசாற்றுகிறது.

கோயிலின் சிறப்புக்களை இணைதளத்தில் படித்துவிட்டு நேரில் காணச் செலவோருக்கு மிஞ்சுவது, இடிபாடுகளைக் காண்பதால் வரும் வேதனையே! கோயிலுக்கு முன்னால் மொட்டைக்கோபுரம் - வாயில் தாண்டியதும் அழகான நடைபாதை - சுற்றிலும் புல் தரைகள். வலப்பால் மகிஷாசுரமர்த்தினி கோயில் உள்ளது. அம்பாள் இருபது கரங்களுடன் காட்சித் தருகிறாள். அபயவரதம் நீங்கலாக 18 கரங்களில் 18 ஆயுதங்கள் உள்ளன. பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை நாளில் இத்தேவிக்கு, காவடி எடுத்து விழாக் கொண்டாடப்படுகிறது.

சற்றுத் தள்ளிச் சென்றால் சுதையாலான பெரிய யாளி காட்சி தருகிறது. அதனுள் இறங்கிச் சென்று "சிம்மக்கிணற்றை"க் காணலாம். இக்கிணற்றில் கங்கை நீர் கலந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மதிற்சுவர்கள் இடிந்து போயுள்ளன.

உள்ளே நுழைந்து செல்லும்போது வலப்பால் நவக்கிரக பீடமுள்ளது. இங்குள்ள நவக்கிரக அமைப்பு விந்தையானது. ஒன்பது கிரகங்களும் ஒரே கல்லில் சானசாஸ்திர முறைப்படி செதுக்கப்பட்டுள்ளன. பீடம் தாமரை வடிவம். நடுவில் சூரியன்; சுற்றிலும் எட்டு கிரகங்கள் இதழ்கள் போன்ற அமைப்பில் உள்ளன. கீழே ஏழு குதிரைகள் பூட்டிய தேரை அருணன் சாரதியாக இருந்து செலுத்துவது; ஒருபால் 12 பேர் நாதஸ்வர வாத்யங்களை வாசிப்பது, கடையாணி பூட்டிய தேரில் உலகை வலம்வரும் கோலம் - மிகவும் அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலில் கிடைத்துள்ள கல்வெட்டுக்கள் மூலம், ஊர்ப் பெயர் வடகரை விருதராச பயங்கர வளநாட்டு மேற்காநாட்டு மண்ணை கொண்ட சோழவள நாட்டு கங்கை கொண்ட சோழபுரம் என்றும்; இறைவன் பெயர் திருப்புலீஸ்வரமுடையார் என்றும் குறிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. மேலும் சிவபெருமானுக்கு அளிக்கப்பட்ட நிலத்துக்குத் திருநாமத்துக்காணி என்றும், திருமாலுக்கு அளிக்கப்பட்டது திருவிடையாட்டம் என்றும் பெயர் வழங்கப் பெற்றன என்ற செய்தியும்; மன்னனார் என்பது - திருமாலுக்குப் பெயர். அவர் எழுந்தருளிய காரணத்தால் அப்பதி மன்னனாகுடி என்று பெயர் பெற்றது. அதுவே பிற்காலத்து மன்னார்குடி என்றாயிற்று. அதன் பழம்பெயர் வீரநாராயண நல்லூர் என்பதே என்பன போன்ற பல செய்திகள் இக்கல்வெட்டுக்களிலிருந்து தெரியவருகின்றன.

இத்திருக்கோயிற் பெருமானுக்கு இராசேந்திர சோழன் கங்கை நீராட்டியதை நினைவு கூறும் வகையில் 108 குடங்கள் கங்கை நீரால் அபிஷேகம் 1985, 1986ஆம் ஆண்டுகளில் செய்வித்து, அது முதல் ஆண்டுதோறும் சுவாமிக்கு ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம்

குலதெய்வ வழிபாடு-கருப்பண்ணசாமி



                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              கருப்பன், கருப்பணன், கருப்பு, கருப்பண்ணசாமி என்று பயபக்தியோடு வணங்கப்படும் துடியான கிராம காவல் தெய்வம், கருப்பசாமி. கறுப்பன் அமர்ந்த இடத்தைக் கொண்டு பல்வேறு விதமாய் கருப்பரை அழைப்பதுண்டு. சங்கிலி கறுப்பன், கறுப்பனார் சாமி, குல கறுப்பனார், பதினெட்டாம்படியான், சின்ன கருப்பசாமி, பெரிய கருப்பசாமி, மீனமலை கருப்பசாமி, முன்னோடை கருப்பசாமி, நொண்டி கருப்பசாமி, ஒண்டி கருப்பசாமி என கருப்பசாமி வழிபாடு தமிழ்நாட்டு கிராமங்களில் இருக்கின்றது.

கருப்பன், கருப்புசாமி, கருப்பாயி எனும் பெயர்களைத் தென் தமிழர்கள் தம் குழந்தைகளுக்கு பெயராக சூட்டுவது காணலாம். தமிழ்நாட்டு கிராம தெய்வங்களிலேயே மிகவும் சிறப்பு பெற்ற தெய்வமாக கருப்புசாமி இருந்து வருகிறார். கருப்புசாமி இல்லாத கிராமங்களே இல்லை எனலாம்.

அடர்ந்த மீசையும், உருட்டிய விழிகளும், சிவந்த உதடும், ஓங்கிய அருவாளும், குதிரை வாகனமும் கொண்டு குலை நடுங்கும் தோற்றம் கொண்டவர் கருப்பன். உயர்ந்த உருவமும், கருத்த மேனியும் வேகமான ஓட்டமும், துடியான ஆட்டமும் கொண்டவர். எந்த எதிரிகளையும் அழிக்க வல்லவர். இவரிடம் பொய்யோ, ஏமாற்றமோ செல்லுபடி ஆகாது. நம்பியவருக்கு காவலாகவும், எதிர்ப்பவர்களுக்கு எமனாகவும் இருப்பவர் கறுப்பர். பரமசிவன் அம்சம் என்றும், பத்ரகாளி அம்சம் என்றும் வணங்கப்படுகிறார். தென் தமிழ்நாட்டின் எல்லா ஆலயங்களிலும் இவர் காவல் தெய்வமாக உள்ளார். பெரும்பாலும் எல்லா கிராம எல்லையிலும் காவலாக ஆட்சி செய்கிறார். பெரியாண்டவர் என்ற பெயராலும் பரவலாக குடி கொண்டுள்ளார்.

ஸ்ரீராமருக்கு இரு புதல்வர்கள், சீதை லவனை மட்டுமே பெற்றதாகவும், தண்ணீர் பிடிக்க சீதை சென்ற போது லவனை பார்த்துக்கொள்ளுமாறு வால்மீகி முனிவரிடம் கூறி சென்றாள். திரும்ப வந்து லவனை சீதை தூக்கி சென்று பர்ணசாலைக்கு வெளியே உணவு ஓட்டிக்கொண்டிருந்தாள். இது தெரியாத வால்மீகி முனிவர், குழந்தையை காணாது, சீதை சபிப்பாளோ என்று பயந்து தர்ப்பை புற்களை தன் தவ வலிமையால் உருவேற்றி லவனை போன்ற ஒரு குழந்தையை உருவாக்கினார். குசன் என்ற புதிய பிள்ளையையும் சேர்த்து சீதை இரு பிள்ளைகளையும் தன பிள்ளையாகவே வளர்க்கிறாள்.

ராமர் கானகம் வந்து சீதையிடம் இரண்டில் எது நம் குழந்தை, என கேட்கிறார், உடனே தீக்குளித்த சீதை அதையே தன்மகன்களை செய்யச்சொல்ல, லவன் பிழைத்து வர, குசன் மட்டும் யாக தீயில் கருக, ஸ்ரீராமரும் உயிர் தந்து குசனை காக்க, தீயில் கருகியதால் கருப்பா என்று அழைத்தாராம். அதுமுதல் அவர்தான் கருப்பண்ணசாமியானார் என்று ஒரு கதை மக்களால் கூறப்படுகிறது.

பெரும்பாலும், மது, கஞ்சா, மாமிசம் கொண்டே வணங்கப்படுகிறார். பொங்கலிட்டு, பூமாலை சார்த்தி மேள, தாளங்களோடு ஆர்ப்பாட்டமாய் இவரின் திருவிழா கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் சொத்து, சுகம், மக்கள், மாடு போன்ற எல்லா செல்வங்களுக்கும், சுகங்களுக்கும் இவரே காவல் என்று நம்புகின்றனர். எதிரி பயம் நீங்கவும், கொலை, களவு ஏற்ப்படாமல் இருக்கவும் இவரே கதி என்று இவருக்கு படையல் இடுகின்றனர். கருப்பரும் வணங்கும் அத்தனை ஏழை எளிய மக்களுக்கும் எப்போதும் காவலாக இருந்து கண்மூடாது சேவை செய்கிறார்.

சோமவார விரதம் இருக்கும் முறை

 

சோமவார விரதத்தை எந்த மாதத்திலும் ஆரம்பிக்கலாம். திங்கள் தோறும் விரதமிருந்து, குளித்து ஒருவேளை உணவு தவிர்த்து, சிவன் கோவிலில் தீபம் ஏற்றி, ஏற்ற பதிகம் பாடி சிவனை தரிசித்து, சோமவார விரதம் இருக்கவேண்டும். இவ்வாறு,பதினாறு சோம வாரம் விரதங்கள் முடித்து மறுநாள் விடியலில் 16 லட்டுகள் தயாரித்து கோயிலுக்கு கொண்டுபோய் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு தந்து, தானும் சாப்பிடவேண்டும். பசு மாட்டிற்கு ஒரு லட்டைக் கொடுத்து, மீதி ஒரு லட்டை வீட்டிற்குக் கொண்டு வந்து வீட்டில் உள்ளோருக்கு கொடுத்து, விளக்கு வைக்கும் நேரம்வரை பூஜை செய்ய வேண்டும். யாரிடமும் அன்று, கோபம் கொள்ளக்கூடாது. இவ்வாறு சோமவார விரதம் இருப்போருக்கு ஈசன் அவரவர் வேண்டும் பலனை கட்டாயம் தருவார் என்பது உண்மை.

அன்பர்கள் சோமவார விரத லட்டு செய்யும் விதம் இங்கு கூறுகிறோம்.

1/4 கிலோ சுத்த நெய்
1/2 கிலோ சலித்த கோதுமை மாவு
400 கிராம் தூய வெல்லம்

கோதுமை மாவை வறுத்து கீழே இறக்கி வைத்துக்கொண்டு காய்ச்சிய தூய நெய், பொடி செய்த வெல்லத்தையும் மாவுடன் நன்றாகக் கலந்து கொண்டு, மெல்ல சூடாக்கி இறக்கி பின் சிறிய சிறிய உருண்டைகளாக லட்டு பிடிக்கவும்

சோமவார விரதம் இருக்கும் முறை

சோமவார விரதத்தை எந்த மாதத்திலும் ஆரம்பிக்கலாம். திங்கள் தோறும் விரதமிருந்து, குளித்து ஒருவேளை உணவு தவிர்த்து, சிவன் கோவிலில் தீபம் ஏற்றி, ஏற்ற பதிகம் பாடி சிவனை தரிசித்து, சோமவார விரதம் இருக்கவேண்டும். இவ்வாறு,பதினாறு சோம வாரம் விரதங்கள் முடித்து மறுநாள் விடியலில் 16 லட்டுகள் தயாரித்து கோயிலுக்கு கொண்டுபோய் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு தந்து, தானும் சாப்பிடவேண்டும். பசு மாட்டிற்கு ஒரு லட்டைக் கொடுத்து, மீதி ஒரு லட்டை வீட்டிற்குக் கொண்டு வந்து வீட்டில் உள்ளோருக்கு கொடுத்து, விளக்கு வைக்கும் நேரம்வரை பூஜை செய்ய வேண்டும். யாரிடமும் அன்று, கோபம் கொள்ளக்கூடாது. இவ்வாறு சோமவார விரதம் இருப்போருக்கு ஈசன் அவரவர் வேண்டும் பலனை கட்டாயம் தருவார் என்பது உண்மை.

அன்பர்கள் சோமவார விரத லட்டு செய்யும் விதம் இங்கு கூறுகிறோம்.

1/4 கிலோ சுத்த நெய்
1/2 கிலோ சலித்த கோதுமை மாவு
400 கிராம் தூய வெல்லம்

கோதுமை மாவை வறுத்து கீழே இறக்கி வைத்துக்கொண்டு காய்ச்சிய தூய நெய், பொடி செய்த வெல்லத்தையும் மாவுடன் நன்றாகக் கலந்து கொண்டு, மெல்ல சூடாக்கி இறக்கி பின் சிறிய சிறிய உருண்டைகளாக லட்டு பிடிக்கவும்

ஓம் நமசிவாய

வெண்ணீறு அணிகிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே .. என்பது மணிவாசகர் கருத்து.
சைவ சமயமே சமயம் சமயாதீதப் பழம்பொருளைக்
கைவந்திடவே மன்றுள்வெளி காட்டும் இந்தக் கருத்தைவிட்டுப்
பொய்வந்துழலும் சமயநெறி புகுதவேண்டா முத்திதரும்
தெய்வசபையைக் காண்பதற்குச் சேரவாரும் செகத்தீரே
எனும் தாயுமானார் திருவாக்கை உணர்க.
சைவ வழி என்பது தளிர்த்துப் பூத்துக் காய்க்கும் ஒரு தருவை போன்றது. அதன் எல்லா பகுதியையும் சைவனே அனுபவிப்பான். சிவன் வழி மாறி, சிவனருளாலே, அவன் அருமை காணவேண்டி, அவன் விதித்தபடி புற மதம் புகுந்த ஒருவன் நிழல் மட்டும் அணுகி, பின் பல மரணம் எய்தி தருவை எட்டிய குருவியாவான்.

வெள்ளி, 6 ஜூன், 2014

63 நாயன்மார்

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 

இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்
ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்
கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்
முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்
திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
ஆரூரான் ஆரூரில் அம்மானுக் காளே. 

திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்
பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்
அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 

வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்
கார்கொண்ட கொடைக்*கழறிற் றறிவார்க்கும் அடியேன்
கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 

பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்
பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்
விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
கழற்*சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 

கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த
கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 

கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை
மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்
புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்
திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே. 

புதன், 4 ஜூன், 2014

குருப்பெயர்ச்சி பலன்கள் பகுதி-2 2014-2015

குருப்பெயர்ச்சி பலன்கள் பகுதி-2 2014-2015



மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பும், மரியாதையும் கொடுப்பவர்களே! நீங்கள் எந்த விஷயத்திலும் இறங்கினாலும் ஒருமுறைக்கு இருமுறை நன்கு   யோசித்து செயல்படுவீர்கள். இதுவரை உங்களது தைரிய ஸ்தானத்தில் இருந்த குருபகவான் இனி உங்களின் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார்.  இதனால் மனக் குழப்பங்களிலிருந்து விடுபட்டு நேரான வகையில் சிந்திப்பீர்கள். அரசாங்கத்தில் முக்கியமானவர்களின் ஆதரவு கிடைக்கும். அனைவரிடமும்  சுமுகமான உறவு தொடரும். சகோதர, சகோதரிகள் பகைமை மறைந்து நட்பு பாராட்டுவார்கள். வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும்.

செய்தொழிலில் முன்னேற்றத்தை காண்பீர்கள். குருபகவானின் பார்வை எட்டாம் ராசியின் மீது படிகிறது. இதனால் நெடுநாட்களாக வாட்டி வதைத்துக் கொண்டிருந்த உடல் உபாதைகள் நீங்கும்.  சண்டை சச்சரவுகள் இல்லாமல் செயல்படுவீர்கள். ஆனாலும், முழுமையான வெற்றிகளைப் பெற முடியாமல் போகும். ஆன்மிக அறிவை வளர்த் துக் கொள்வீர்கள். இளைய சகோதர சகோதரிகளின் உதவிகளைப் பெறுவீர்கள். வாழ்க்கை வசதிகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவீர்கள். மனதிலிருந்த தீய எண்ணங்கள் மறைந்து நேர்மையாக சிந்திக்கத் தொடங்குவீர்கள்.

குருபகவானின் பார்வை தொழில் ஸ்தானத்தின் மீது படிகிறது. இதனால் செய்தொழிலில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். வாக்கு சாதூர்யத்தால் அனைவரையும் வெற்றி கொள்வீர்கள். உங்கள் ஆசைகள் அனைத்தும் சுலபமாகப் பூர்த்தியாகும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். கடன் தொல் லைகளிலிருந்து விடுபடுவீர்கள். குரு பகவானின் பார்வை உங்களின் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் ராசியில் படிகிறது. இதனால் ஏமாற்றங்களிலிருந்து விடுபடுவீர்கள். அனைவரும் உங்களை மதித்து நடப்பார்கள். இழப்புகளைக் கண்டறிந்து அவற்றை உடனுக்குடன் சரிசெய்து விடுவீர்கள்.

கொடுத்த வாக்கை எப்பாடு பட்டாவது காப்பாற்றிவிடுவீர்கள். கடன் தொல்லை இல்லாவிட்டாலும் பொருளாதாரம் சிறிது ஏற்ற இறக்கமாகவே இருக்கும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உங்களின் வேலைகளை சரியாகச் செய்து முடித்து விடுவீர்கள். சக ஊழியர்களால் உங்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்களைக் கண்டறிந்து விலக்குவீர்கள். வருமானம் சீராக இருக்கும். சிறிய தடை ஏற்பட்டாலும் பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வார்கள்.

வியாபாரிகள் திருப்தியாக வியாபாரத்தை நடத்து வீர்கள். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். வாடிக்கையாளர்களின் விருப்பங்களையும், தேவைகளையும் எப்பாடுபட்டாவது பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தை தனித்தன்மையுடன் நேர்த்தியாகச் செய்வீர்கள். சிறிய முதலீடுகளைச் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

விவசாயிகளுக்கு விளைச்சல் நல்லபடியாக இருக்கும். பழைய குத்தகை பாக்கிகளை திருப்பிச் செலுத்துவீர்கள். பூச்சிக் கொல்லிகளுக்கு செலவு செய்ய நேரிடும். பாசன வசதிகளில் கவனம் செலுத்துவீர்கள். கால்நடைகளுக்கு பராமரிப்புச் செலவு செய்ய நேரிடும். சக விவசாயிகளுக்கு உதவிகளைச் செய்து அவர்களின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ளவும்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் திறமைக்கேற்ற பொறுப்புகள் கிடைக்கும். நேரடியாகத் தொல்லைகள் கொடுத்தவர்கள் அடங்கி விடுவார்கள். பிறரின் வலிமையை அறிந்து அதற்கேற்றார்போல் பேசுவீர்கள்.

கலைத்துறையினர் செய்தொழிலில் போட்டி பொறாமைகளை சந்தித்தாலும் உங்களின் முயற்சிகள் வெற்றி பெறும். நண்பர்களின் உதவியுடன் தொழிலில் புதிய  நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். அவர்களுடனான கூட்டு முயற்சியில் சில வெற்றிகளைக் காண்பீர்கள். சிலருக்கு புதிய வாகனச் சேர்க்கை உண்டாகும். பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்து நடந்து கொள்வார்கள். பணவரவு சீராக இருக்கும். உடல்  ஆரோக்யம் மேம்படும். ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். உங்களால் குடும்பம் முன்னேற்றம் அடையும்.

மாணவமணிகள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர்கள். நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களிடம் அனாவசியப்  பேச்சு வேண்டாம்.

பரிகாரம்: செவ்வாய்க் கிழமைதோறும் அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று வரவும். முடிந்தவர்கள் அருகிலிருக்கும் அறுபடை தலங்களுக்குச் சென்று வாருங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்: கந்த சஷ்டி கவசத்தைஅன்றாடம் பாராயணம் செய்தும், “ஓம் சரவணபவஎன்ற மந்திரத்தை தினமும் 11 முறையும் சொல்லுங்கள். உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறும்.

மலர் பரிகாரம்: செவ்வரளிமலரை ஏதேனும் கோயிலில் அருள்பாலிக்கும் முருகனுக்கோ அல்லது அம்மனுக்கோ சார்த்திவர குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி. தேய்பிறை: ஞாயிறு, புதன், வெள்ளி.

செவ்வாய், 3 ஜூன், 2014

ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி

இராவணனின் சரித்திரம்

அவசியம் இல்லாது இறைவன் அவதாரம் எடுப்பதில்லை. பல சீவராசிகளின் தொடர் செயல்கள் அனைவரையும் பாதிக்கும் வேளையில், அவர்களது ஈடுபாட்டினால் மட்டுமே திருத்தி அமைக்க முடியாததோர் அதர்மச் சூழ்நிலை நிலவ வேண்டும். அங்குதான் இறைவன் நேரடியாகத் தலையெடுக்க வேண்டியிருக்கிறது. ராவணனது கொடுஞ்செயல்கள் அவ்வாறான சூழ்நிலை ஒன்றை ஏற்படுத்தி, ராமாவதாரத்திற்கு ஒரு மூல காரணமாக அமைந்தது. அதனால் ராவணனின் பிறப்பையும், அவனது செயல்களையும் ஆராய வேண்டிய காரணம் உருவாகிறது.

இராவணனின் தோற்றத்திற்கு வெகு காலம் முன்பாகவே, மகாவிஷ்ணு உறையும் ஸ்ரீ வைகுண்டத்தின் வாயில் காப்போர்களாக ஜய மற்றும் விஜய என்னும் பெயர் கொண்ட (கடந்த மற்றும் தற்போதைய தமிழ் ஆண்டின் பெயர்களும் அவைகளே!) இருவர் பணியாற்றினார்கள். ஒரு முறை சனகாதி முனிவர்கள் எனப்படும் தேவ ரிஷிகளான சனகர், சனாதனர், சனத்குமாரர் மற்றும் சனந்தனர் என்ற நால்வரும் மகாவிஷ்ணுவைத் தரிசிக்க வைகுண்டம் வந்தனர். (ஆலமரத்தடியில் தக்ஷிணாமூர்த்தியின் காலடியில் எப்போதும் வீற்றிருந்து “நான்மறை, ஆறு அங்கம் கற்கும்” நான்கு முனிவர்கள்தான் அவர்கள்.) அவ்வாறான பழம்பெரும் முனிவர்கள் என்றாலும், தாங்கள் செய்திருந்த மாபெரும் தவத்தின் விளைவாகப் பார்ப்பதற்கு இளைஞர்கள் போல அவர்கள் தெரிந்தனர். அதனால் அவர்களை ஏதோ விளையாட்டிற்காக வந்துள்ள இளம் வயது வாலிபர்கள் என்றெண்ணி, அவர்கள் திருமாலைத் தரிசிப்பதற்கு ஜெயனும், விஜயனும் அனுமதி அளிக்காது மறுத்து விட்டனர். அதனால் கோபம் கொண்ட முனிவர்கள் தங்கள் தவ வலிமையால் அவர்கள் இருவரையும் இனி வரும் மூன்று ஜென்மங்களுக்கு அரக்கர்களாகப் பிறப்பீர்கள் என்று சாபம் கொடுத்துவிட்டார்கள். தங்களது தவறை உணர்ந்து ஜெய-விஜயர்கள் உடனே முனிவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவே, முனிவர்களும் அவர்கள் மேல் கருணைகொண்டு, அந்த மூன்று ஜென்மங்களின் முடிவில் சாப விமோசனம் அடைந்து இறைவனின் அருளால் இருவரும் தங்களது சுய உருவத்தை மீண்டும் பெறுவதோடு அவரவர்கள் பணிக்கும் திரும்புவார்கள் என்று கூறினார்கள்.

அதன்படி மூன்று ஜென்மங்களில் ஜயன் ஹிரண்யகசிபு, ராவணன் மற்றும் சிசுபாலனாகவும், விஜயன் ஹிரண்யாக்ஷகன், கும்பகர்ணன் மற்றும் தந்தவக்ரனாகவும் பிறக்கிறார்கள். இவ்வாறான அவர்களது ஒவ்வொரு பிறவிகளிலும் எண்ணற்ற, நீதிக்குப் புறம்பான பல கொடுஞ்செயல்களை அவர்கள் புரிந்ததால் மகாவிஷ்ணு வெவ்வேறு அவதாரங்களை எடுத்து அவர்களை அழிக்கவேண்டி வருகிறது. வராக அவதாரத்தில் ஹிரண்யாக்ஷகனும், நரசிம்ஹ அவதாரத்தில் ஹிரண்யகசிபுவும் மாய்கிறார்கள். இராம அவதாரத்தில் ராவணனும், கும்பகர்ணனும் அவரது கையாலேயே கொல்லப்படுகிறார்கள். இறுதியாகச் சிசுபாலனும், தந்தவக்ரனும் ஸ்ரீ கிருஷ்ணரால் இறக்கிறார்கள். முனிவர்கள் முன்பு கூறியபடியே, ஸ்ரீ கிருஷ்ணரின் சக்ராயுதத்தால் உயிர் துறக்கும் சிசுபாலன் மற்றும், தந்தவக்ரனின் ஆன்மாக்கள் அடுத்த கணமே பரமாத்மாவுடன் கலந்து பாவ விமோசனம் பெறுகின்றன. இவ்வாறு அவர்கள் இருவரும் மோக்ஷம் அடைவதை யுதிஷ்டிரனும் மற்றவர்களும் ஆச்சரியத்துடன் நேரில் கண்டு அதிசயிக்கின்றனர். இந்த விவரங்கள் எல்லாம் ஸ்ரீமத் பாகவதத்தின் ஏழாவது ஸ்கந்தம், முதலாவது அத்தியாயத்தில் கூறப்பட்டிருக்கின்றன.

ravana

இப்போது நாம் ராவணனின் கதையைப் பார்ப்போம். புலஸ்தியன் என்றதொரு பிராம்மண ரிஷியும், அவரது மகனும் பிரும்ம ரிஷியுமான விஸ்ரவன் என்றும் இருவர் இருந்தனர். விஸ்ரவனுக்கு வைஸ்ரவணன் என்று பெயர் கொண்ட மகன் ஒருவன் பிறந்தான். குபேரன் என்றும் பெயர் கொண்ட அவனே செல்வங்கள் எல்லாவற்றுக்கும் அதிபதியாக வணங்கப்படுகிறான். பின்னாளில் மனைவியை இழந்த விஸ்ரவனை கைகசி என்னும் அரக்கி மயக்கி, அவன் மூலம் நான்கு குழந்தைகளைப் பெற்றாள். விஸ்ரவனை அசுபமான வேளையில் அவள் விரும்பியதால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அசுர குணங்களுடனும், தோற்றத்துடனும் இருப்பார்கள் என்று விஸ்ரவன் அவளிடம் கூறினான். இராவணன், கும்பகர்ணன் மற்றும் சூர்ப்பனகை மூவரும் அவ்வாறே அவர்களுக்குப் பிறந்தவர்கள். நல்ல குணங்களுடனும், நேர்மை ஒழுக்கம் மிகுந்தவனாகவும் ஒரு பிள்ளையாவது வேண்டும் என்று கைகசி விஸ்ரவனிடம் வேண்டிக்கொள்ள அவ்வாறு பிறந்தவன்தான் விபீஷணன். இந்த உறவு முறையால் ராவணன் குபேரனுக்கு மாற்றாந்தாய் வழி வந்த தம்பி ஆகிறான்.

அரக்கர்களின் தலைவனான சுமாலியின் மகள்தான் கைகசி. தந்தை சுமாலியின் தூண்டலில்தான் கைகசி விஸ்ரவனைக் கணவனாக வரித்துக்கொண்டாள். குபேரனிடம் வஞ்சம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே சுமாலியின் எண்ணம். முன்பு சுமாலிக்கு மால்யவன் என்ற அண்ணனும், மாலி என்கிற தம்பியுமாக இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். இந்த மூன்று சகோதரர்களும் இலங்கையை ஆண்டுகொண்டு வளமாகவும் வாழ்ந்துகொண்டு இருந்தனர். ஆட்சி செய்கிறோம் என்ற ஆணவத்தில் அவர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். அதனால் தேவர்களுக்கும் அரக்கர்களுக்கும் இடையே பெரிய போர் ஒன்று நடந்தது. தேவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி மஹாவிஷ்ணுவே போரில் இறங்கி, அரக்கர்களைத் தோற்கடித்து ஆட்சியை அவர்களிடம் இருந்து கைப்பற்றி, குபேரனை அரசனாக்கி இலங்கையை ஆளவைத்தார். அந்தப் போரில் சுமாலியின் தம்பி மாலி இறந்து போனான். வசதியான இடத்தையும், ஆட்சி பீடத்தையும் இழந்த அரக்கர்கள் தங்குவதற்கு இடம் இல்லாமல் இங்குமங்குமாக அலைந்துகொண்டு, தேவர்களிடம் வஞ்சம் தீர்த்துக்கொள்ள சரியான சந்தர்ப்பம் ஒன்றைத் தேடிக்கொண்டு இருந்தனர். அந்த நிலையில்தான் சுமாலி விஸ்ரவனை கைகசியின் வலையில் மாட்டிக்கொள்ள வழி வகுத்தான்.

சுமாலியின் திட்டம் அவ்வாறு இருந்ததால், குபேரன் அளவிற்கு அவர்கள் உயரவேண்டும் என்ற ஆசையால் உந்தப்பட்ட கைகசி தனது மூன்று மகன்களையும் தீவிரமாகத் தவம் செய்து வலிமை பெறுவதற்கு வற்புறுத்தினாள். அவர்களும் வெகு காலத்திற்குத் தவம் செய்து வந்தார்கள். அதன் இறுதிக் கட்டத்தில் பிரம்மா அவர்கள் முன்பு தோன்றி அவர்களுக்கு வேண்டிய வரங்களைக் கேட்கச் சொன்னார். கடவுள், தேவர்கள், மற்றும் அரக்கர்கள் எவராலும் தனக்கு இன்னலோ, முடிவோ வரக்கூடாது என்று ராவணன் வேண்டி நின்றான். மாந்தர்களாலும், விலங்குகளாலும் தனக்குப் பிரச்சினை ஏதும் வரமுடியாது என்ற அவனது இறுமாப்பின் மூலம் விளைந்த எண்ணத்தால் அவர்களை அவன் அந்த சாகாவரப் பட்டியலில் இருந்து விலக்கி வைத்தான். அவனாலேயே ஏற்பட்ட இந்த விதிவிலக்கினைப் பின்பு விஷ்ணுவும், தேவர்களும் சரியான சந்தர்ப்பத்தில் பயன்படுத்தி அவனது அழிவிற்கு வழி கண்டனர்.

கும்பகர்ணன் வரம் கேட்கப் போகும் சமயம், ஏற்கனவே அவனால் மிகவும் அவதியுற்ற கடவுளும், தேவர்களும் அவன் என்ன வரன் கேட்டு எப்படித் தொந்திரவு செய்வானோ என்ற அச்சத்தில் இருந்தனர். அதனால் பிரம்மனின் வேண்டுகோளின்படி சரஸ்வதி தேவி அவனது நாவில் புகுந்து அவன் கேட்கப்போவதைத் திசை மாற்றும்படி செய்தாள். அதன்படி அவனும் தான் தூங்கச் சென்றால் தனது தூக்கம் நீண்ட காலம் நீடிக்கவேண்டும் என்ற வரத்தை வேண்டினான்.
விபீஷணனோ, அவனது இயல்பான தன்மைப்படி, தனது உயிருக்கே ஆபத்து வரும் என்றால் கூட தான் என்றும் நீதி, நேர்மை தவறாது தர்மத்தின் பக்கமே நிற்க வேண்டும் என்ற வரத்தை வேண்டினான். இவ்வாறாக ஒவ்வொருவரும் தாங்கள் வேண்டியதைக் கேட்டுப் பெற்றார்கள்.

சோமாசி மாற நாயனார் குருபூஜை 03-06-2014

 சோமாசி மாற நாயனார் குருபூஜை 03-06-2014

சோழ நாட்டிலுள்ள திருவம்பர் என்னும் தலத்தில் தூய அந்தணர் மரபிலே பிறந்தவர் தான் மாற நாயனார் என்பவர். இவர் அறவொழுக்கங்களில் நெறிபிறழாது முறையோடு வாழ்ந்து யாவராலும் போற்றப்படும் அளவிற்கு மேம்பட்டு விளங்கினார். இவரது திருமேனியிலே எந்நேரமும் திருவெண்ணீறு துலங்கும். நாவிலே நமச்சிவாய மந்திரம் ஒலிக்கும். பாதங்கள் சிவ ஆலயங்களை எந்நேரமும் வலம் வரும். இவ்வாறு நலம் தரும் நாயகனை நாளெல்லாம் போற்றிப் பணிந்தார் அடிகளார். இறைவனின் திருவடி நீழலையே பற்றி வீடு பேற்றை அடைவதற்கான ஒப்பற்ற வேள்விகள் பல நடத்தி வந்தார். இவர் நடத்தி வந்த வேள்விகள் பலவற்றிலும் சோம வேள்விதான் மிக மிகச் சிறந்தது. எண்ணற்ற சோம வேள்விகளைச் செய்தமையால்தான் இவருக்குச் சோமாசி மாறர் என்ற சிறப்புப் பெயர் உண்டாயிற்று. இவர் சிவத்தலங்கள் தோறும் சென்று சிவதரிசனம் செய்து வந்தார். ஒருமுறை திருவாரூரை அடைந்து தேவாசிரியத் திருமண்டபத்தைத் தொழுது நின்றார். அப்பொழுது சுந்தரமூர்த்தி சுவாமிகள் பரவை நாச்சியாரோடு திருவாரூருக்கு எழுந்தருளியிருந்தார். அவர்களைக் கண்டதும் நாயனாருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை! சோமாசி மாற நாயனார் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருப்பாதம் பணிந்து வழிபட்டார். இவருக்கு சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்பும் அருளும் கிடைத்தது. இவ்வாறு சிவதொண்டு பல புரிந்து வாழ்ந்து வந்த சோமாசி மாற நாயனார் திருவைந்தெழுத்து மகிமையால் விடையில் எழுந்தருளும் சடைமுடிப் பெருமானின் திருவருளைப் பெற்று வாழும் அருந்தவப் பேற்றினைப் பெற்றார்.

குருபூஜை: சோமாசிமாற நாயனாரின் குருபூஜை வைகாசி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.