செவ்வாய், 10 ஜூன், 2014

108 தாண்டவபேதங்கள்

108 தாண்டவபேதங்கள்


பேரூழி காலத்தே பெருமான் எல்லா ஜீவராசிகளையும் தன்னுள் அடக்கி ஓய்வு கொள்ள செய்கிறார். ஒவ்வொரு ஜீவன்களின் வினைப்பயனையும் தொலைத்தல் வேண்டும், கரைக்க வேண்டும், அதற்கு இன்னும் பல பிறவிகள் எடுத்தல் வேண்டும். என்ன செய்வது என்று ஈசனார் எண்ணுகின்றார். வழி பிறக்கிறது, ஆனந்தம் தொடர்கிறது, இறைவனார் மெல்ல கால் உயர்த்தி ஆடத்தொடங்குகிறார். பரந்த வெளி விரியத் தொடங்குகிறது. சப்தம் எழ சலனம் எழுகிறது. சலனம் எழுந்ததால் ஆக்கல் எழுகிறது, அதனால் அருளல், அருளியதால் காத்தல், காத்தலை தொடர்ந்து மறைத்தல், பின் அழித்தல் என ஐந்தொழிலும் அழகாய் நாட்டியத்தோடே நடை பெறுகிறது.

பரவிய பெருவெளிஎங்கும் பரமனின் திருக்கூத்து நடக்கிறது. அதில் பிரபஞ்சம் தோன்றுவதும் அழிவதும் தொடர்கிறது. ஈசனின் ஆட்டம் ஊழிக்காலம் வரை இடைவிடாது தொடர்வதால் உயிர்களின் இயக்கம், பஞ்சபூதங்களின் மாறுதல் கதி மாறது சுழல்கிறது. சீரான பாவ, ராக, தாளத்தோடு ஆடும் நாயகனின் அற்புத திருக்கோலமே நடராஜர் திருக்கோலம். ஆடவல்லானான நம் பெருமான் ஆட்டுவிக்கும் பொம்மை அன்றோ நாம். அவன் புகழ் பாடி, நடராஜப்பெருமானின் பெருமைகளை இங்கு காண்போம்.

கலைகளில் சிறப்பானது நாட்டியம், மனிதன் உள்ளிட்ட சகல உயிர்களும் மகிழ்ச்சியில், கோவத்தில் இன்னும் பல்வேறு உணர்வுகளில் துள்ளி குதித்த போதோ, கை கால்களை அசைத்த போதோ உருவானதே நாட்டியம். ஆக ஆதிகலையும் நாட்டியமே. அதன் தலைவன் நம் கூத்தபிரான். அம்பலத்தே ஆடும் ஆடல்வல்லான், தான் ஆடியது மட்டுமின்றி தன்னால் உருவாக்கப்பட்ட மானிடர்கள் ஆடி இன்புற, நாட்டிய சாஸ்திரங்களையும் உருவாக்கி உலகிற்கு தந்த வள்ளல். நாட்டிய விளக்கத்துக்கு தாமே ஆடியும் காட்டிய கருணைக்கடல்.

ஏழுவகை தாண்டவங்கள் சிவபெருமானால் ஆடப்பட்ட தாண்டவங்களுக்குள் சிறப்பாக போற்றப்படுகிறது. ஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம், உமா தாண்டவம், கௌரி தாண்டவம், காளி தாண்டவம், திரிபுர தாண்டவம், சங்கார தாண்டவம். இன்னும் தளம் தோறும் ஆடிய அற்புத தாண்டவங்களும், அவைகளில் போற்றப்படும் 108 தாண்டவபேதங்களும் (கரணங்கள்) நாட்டிய உலகின் பொக்கிஷங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக