புதன், 11 ஜூன், 2014

செந்தமிழ்நாட்டின் சொந்தக்கடவுள் முருகன்.


செந்தமிழ்நாட்டின் சொந்தக்கடவுள் முருகன். மலையும், மலை சார்ந்த பகுதியுமான குறிஞ்சி நிலப்பகுதியின் தலைவன் முருகனே. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று குவலயத்தோர் வழிபட்ட வரலாறு சங்க இலக்கியங்கள் பல இடங்களில் சொல்கின்றன. முருகவேளுக்கு உரிய மந்திரமாக சடாச்சரம் (ஆறெழுத்து) விளங்குகிறது. அது சரவணபவ என்னும் உயரிய மந்திரமே. முருகப்பெருமானுக்குரிய விரதங்களில், செவ்வாய், சஷ்டி, மற்றும் கிருத்திகை விரதங்கள் முக்கியமானவை. உலகெங்கும் குமாரக்கடவுளுக்கு கோயில்கள் இருந்தாலும், தமிழ்நாட்டில் உள்ள அறுபடை வீடுகளும் மிக சிறப்பானவை. முருகனின் சிறப்பான செயல்களை விளக்கும் வண்ணம் அமைந்தவை அறுபடை வீடுகள். 

1. தந்தைக்கு மந்திரம் சொன்ன சுவாமிமலை
2.பழம் வேண்டி ஆண்டியாய் நின்ற பழனி மலை
3. சூரபத்மனை போரிட்டு வென்ற திருச்செந்தூர்
4.சினம் தணிந்து தேவயாணியை திருமணம் புரிந்த திருப்பரங்குன்றம்
5.குறமகள் வள்ளியை திருமணம் புரிந்த திருத்தணிகை
6.இருதேவியரோடு அருளாட்சி புரிந்து வரும் பழமுதிர்சோலை என்பவை அறுபடை வீடுகளாம்.

சிவனாருக்கும், அன்னை உமைக்கும் இடையே சிறுகுழந்தையாய் குமரக்கடவுள் வீற்று இருக்கும் சோமாஸ்கந்த வழிபாடு, மற்றும் விழா புறப்பாடு தமிழகத்தில் மிகப்பழமையானதும், சிறப்பானதுமாகும்.

உற்சவர் மயில் மீது வள்ளி,தேவசேனா தேவியரோடு வரும் அழகு காட்சியாகும்.

பாரத தேசம் மட்டுமின்றி, இலங்கையின் கதிர்காமம், நல்லூர்,மாவிட்டபுரம்,பகுதிகளிலும், மலேசிய, சிங்கப்பூர் நாடுகளிலும் முருக வழிபாடு வெகு சிறப்பானது.

தமிழர் எங்கெல்லாம் இருக்கின்றார்களோ, அங்கெல்லாம் முருகனுக்கு கோயில் உண்டென்று சொல்லலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக