ஞாயிறு, 12 மார்ச், 2017

சூரிய தேவனின் சிறப்பு



     சூரிய தேவனின் சிறப்பு




பூவுலகத்தில் சூரிய வழிபாடு இன்று நேற்று ஏற்பட்டதல்ல
ரிக்வேத காலத்துக்கும் முன்பிருந்தே இந்த வழிபாடு இருந்து வருகிறது. அசையும் பொருள்கள் அனைத்திற்கும் சூரியனே உயிர் தருகிறான் என்கின்றன,
     கி.மு.2000-க்கு முன்பே சூரியன், அக்னி, வருணன் ஆகியோரை உலகத்தினர் வழிபட்டு வந்துள்ளனர்.நம்நாடு சூரிய வெப்பம் மிகுந்த நாடு. ஆகவே, அவன் அருளைப் பெற அவனை மக்கள் வழிபட முற்பட்டதில் வியப்பில்லை. பல நோய்களை சூரிய கிரணங்கள் குணப்படுத்துவதாக அதர்வண வேதம் குறிப்பிடுகிறது. உபநிஷத்துக்களும் புராண இதிகாசங்களும் சூரியனின் புகழைப் பேசுகின்றன. பிற தெய்வங்களைப் போல் அல்லாமல் சூரியன் கண்ணெதிரே தோன்றும் தெய்வமாக விளங்குகிறான்.
சூரியன் ஒரு கோள்! கிரகம்! அதைக் கடவுளாக வழிபடலாமா என்ற சந்தேகம் எழலாம். வேதம் ஒன்றுதான் இந்த சந்தேகத்தைப் போக்குகிறது. வேதமே, சூரியன் கோள மயமானதுதான் என்கிறது. வேதகால ரிஷிகள், “சூரியனே தண்ணீருக்கெல்லாம் ஆத்மா” என்று குறிப்பிடுகிறார்கள். சூரியனால் உலகத்துக்கு ஏற்படும் நன்மைகளையும் வேதம் வரிசைப்படுத்திக் கூறுகிறது.

          வேதத்தில் காணும் உண்மைகள், நவீன விஞ்ஞான உண்மைகளுக்கு முரணாக இல்லை. சூரிய ஒளியில் நிறப்பிரிகை ஏற்பட்டால் ஏழு வண்ணமாகப் பிரிகிறது. ஏழு வண்ண ஒளியின் சேர்க்கையே சூரிய ஒளி. சூரியனுக்கு ஏழு குதிரைகள் என்று வேதம் வர்ணிப்பதன் சூட்சுமம் இதுவே. குதிரையை அசுவம் என்பர். அசுவம் என்ற சொல்லுக்கு வர்ணம் என்றும் பொருளுண்டு.

பாரசீகத்தில் தங்கிவிட்ட ஆரிய குலத்தினர் சூரியனை வழிபட்டார்கள் என்றாலும், அக்னிக்குத்தான் அவர்கள் முக்கியத்துவம் கொடுத்தார்கள். இந்தியாவுக்கு வந்த ஆரியர்கள் திராவிடர்களுடன் கலந்து விக்ரக ஆராதனையை மேற்கொண்டார்கள். சூரியனை விஷ்ணுவின் அவதாரமாக இவர்கள் கொண்டார்கள்.

சூரிய வழிபாட்டினால் தோல் நோய், கண் நோய்கள் குணமாகிவிடும் என்று பாரசீகர்கள் நம்பினார்கள். பாரசீக மத குருக்களான மாகாஸ்கள், சூரிய வழிபாட்டின் மூலம் சிகிச்சை செய்யும் மருத்துவர்களாக விளங்கினர்.

பஞ்சாபை ஆண்ட மன்னன் ஒருவனுக்கு தோல் நோய் ஏற்பட்டது. அவன் மாகாஸ்களை வரவழைத்தான். நோய் குணமாகவே, இப்போது பாகிஸ்தானில் உள்ள “மூல்தான்” நகரில் அவன் சூரியனுக்காகவே ஒரு கோவில் கட்டுவித்தான். 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டிய இந்த ஆலயம்தான் பண்டைய இந்தியாவில் சூரியனுக்காக ஏற்பட்ட முதல் கோயில்.

இந்த ஆலயம் அவுரங்கசீப் காலத்தில் அழிவுற்றது. மூல்தானிலிருந்து சூரியவழிபாடு காஷ்மீருக்குப் பரவியது. பிரபல மன்னனான லலிதாதித்ய முக்தா பீடன் என்பவன் இங்கே சூரியனுக்கு ஒரு கோயில் கட்டினான். இந்தக் கோயில், கிரேக்க ஆலய அமைப்பில் கட்டப்பட்டது. பின்னர் வந்த இஸ்லாமிய மன்னன் சிக்கந்தர் பட்டீஸ்கான் (கி.பி.1391 – 1414) இந்தக் கோயிலை இடித்து நாசமாக்கி விட்டான்.

சூரியனுக்காகக் கட்டிய புராதனக் கோயிலில் ஒன்று ஒரிஸ்ஸாவிலுள்ள கொனார்க் கோயில். கலிங்கத்தை ஆண்ட நரசிங்க தேவன் (கி.பி.1238 – 64) இதைக் கட்டினான். இப்போது இந்தக் கோயிலின் ஒரு பகுதி மட்டுமே மிஞ்சியிருக்கிறது. இந்த ஆலயத்தில் உள்ள சிற்பங்கள் உலகில் வேறு எங்கும் காணக் கிடைக்காத வேலைப்பாடு மிக்கவை.

தமிழ்நாட்டில் கும்பகோணத்தை அடுத்துள்ள சூரியனார் கோயில் என்ற இடத்தில் சூரியனுக்கென்று தனி ஆலயமே இருக்கிறது.

சூரியனைப் பரம்பொருளாக “ஆதித்ய ஹிருதயம்” கூறுகிறது. “மார்க்கண்டேய புராணம்”, “பவிஷ்ய புராணம்” முதலியவை சூரிய வழிபாட்டை விவரிக்கின்றன. மந்திரங்களில் மிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் “காயத்ரி” சூரியனுக்கு உகந்த மந்திரம்.

“சூரிய நமஸ்காரம்” என்பது உடற் பயிற்சி, யோகப் பயிற்சியுடன் கூடிய வழிபாடு. இன்று இது மேல்நாட்டிலும் பரவியுள்ளது.

சூரிய வழிபாடு “சௌர மதம்” என்ற பெயரில் ஷண்மதங்களுள் ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. சௌர மதம் ஒரு காலத்தில் உலகளாவிய மதமாகவும் பரவியிருக்கிறது. ரோமில், கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கிறிஸ்துவ மதத்தையே சௌரம் எதிர்த்து நின்றது. கி.மு.1400-ஆம் ஆண்டு முதலே மத்திய கிழக்கு நாடுகளிலும் அது பரவியிருந்தது. எகிப்தில் சூரியனை “ரே” அல்லது ‘ரா-அதுன் என்று குறிப்பிட்டார்கள். எகிப்திய அரசர்கள் தங்கள் பெயரோடு ‘ரே” என்ற பெயரையும் சேர்த்துக் கொண்டார்கள்.

ஆதிகாலத்தில் சௌர மதத்தினர் சூரியனுக்கு ரத்த அர்க்கியம் கொடுத்து வழிபட்டார்கள். ஆதிசங்கரர்தான் இதை மாற்றினார்.

தை மாதம் முதல் நாள் – சூரியன் மகர ராசிக்குள் (உத்தராயணம்) பிரவேசிக்கும் நாள் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்பட்டு சூரிய வழிபாடு நடத்துகிறார்கள். கீதையில் கண்ணபிரான் ‘ஜ்யோதிஷம் ரவிர் சும் சுமான்’ என்று கூறி, ஜ்யோதிகளில் தாம் சூரியனாக இருப்பதாகத் தெரிவிக்கிறார்.

எனினும் சூரியனை சிவசூரியன் எனும் பெயரில் சிவரூபமாகவும் குறிப்பிடுகின்றனர். சிவபெருமானின் அஷ்ட மூர்த்ங்களில் ஞானக்கண் உடைய ஒருவராகவும் சூரியன் கருதப்படுகிறார்.
 அந்தக் காலத்தில் ரிஷிகள் சூரியனின் கனிந்த ஒளியிலே நாள் தவறாமல் திளைத்து வந்தார்கள். சூரிய கிரணங்களை “ஜீவத்திறல்” என்றும் “ஆயுளை வளர்க்கும் அன்னம்” என்றும் போற்றினார்கள். அவர்கள் உடல், உள்ளம், உயிரில் தேவசக்தியும் தெய்வ ஒளியும் துள்ளின.
சுற்றும் உலகுக்கே சூத்திரமாக விளங்கும் சூரியனின் பெருமை இன்று சுருங்கிப்போய்விட்டது. என்றாலும், பொங்கல் திருநாளில் மட்டும் ஆதித்தனைப் போற்றும் பழக்கம் இன்றும் தொடர்கிறது…!
வெற்றிகளை குவிக்கும் சூரிய வழிபாடு
உத்தராயண புண்ணிய காலத்தின் முதல் மாதம் தை மாதம். சூரியன், சனீஸ்வரரின் வீடான மகர ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் வளர்பிறை ஏழாம் நாள் சூரிய ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. சப்தமி எனும் ஏழாம் நாளில் வருவதால் ரத சப்தமி என எல்லோராலும் அறியப்படுகிறது. நவக்கிரகங்களின் நாயகன் என்றழைக்கப்படுபவர் சூரியன்.

சகல ஜீவ ராசிகள், பயிர் பச்சைகளை தன் ஒளிக்கதிர்களால் வாழ வைத்துக் கொண்டிருக்கும் முதன்மை கிரகம். ஆட்சி, அதிகாரம், தலைமைப் பதவி, ஆளுமை போன்றவற்றின் கர்த்தா.
ஜாதக அடிப்படையில் சூரியன் தயவு இல்லாமல் தலைமைப் பொறுப்புக்கு யாரும் வரமுடியாது.  ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். அதிகாரிகள், அதிகார மையங்கள், தலைமை செயலாளர்கள் ஆகியவற்றில் பணிபுரிய சூரியனின் அனுக்கிரகம் அவசியம். அத்தகைய சர்வ ஆதிக்கமும், அதிகாரமும் உடைய சூரிய பகவானுக்கு உகந்த நாள் இந்த ரத சப்தமி. ரத சப்தமி புண்ணியம் மிக்க நாளாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

      அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து கிழக்கு நோக்கி சூரியனை பார்த்து வணங்கியபின், தாய், தந்தையரை வணங்கி ஆசி பெறுவது இந்துக்களின் முக்கிய வழிமுறையாகும். அன்றைய தினம் குளிப்பதற்கு முன்பு ஏழு எருக்கம் இலைகளை தலை முதல் கை, தோள்பட்டைகள், காதுகள் என வைத்து சூரிய பகவானை பிரார்த்தித்து தலையில் நீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.எருக்கன் இலை என்பது அருக்கன் இலை என்பதில் இருந்து மருவி வந்துள்ளது.



 அருக்கன் என்றால் சூரியன். இந்த இலையில் சூரியனின் சாரம் உள்ளது. எனவேதான் ஆண்டுக்கு ஒருமுறை எருக்கன் இலை வைத்து குளிக்கும் வழிபாடு ஏற்பட்டது. சூரியனுக்கு பல்வேறு விதமான பெயர்கள் உண்டு. தினகரன், பாஸ்கரன், அருக்கன், சூரிய நாராயணன் என பல காரணப் பெயர்கள் உண்டு. இதில்  சூரிய நாராயணன் என்ற பெயர் விஷ்ணுவை குறிப்பதாகும். இந்த ரத சப்தமி நாளில் எல்லா வைணவ தலங்களிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், உற்சவங்கள் நடைபெறும்.

திருப்பதியில் அதிகாலை சூரிய உதயத்தில் தொடங்கி சூரிய அஸ்தமனம் வரை எந்த நாளும் இல்லாத வகையில் பெருமாள் சப்த வாகனங்களில் அமர்ந்து அருள் பாலிப்பார்.
முதலில் சூரிய பிரபையில் ஆரம்பித்து, சேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், கற்பக விருட்ச வாகனம், சர்வ பூபால வாகனம், கடைசியாக சந்திர பிரபையில் எழுந்தருளி நாள் முழுவதும் சேவை சாதிப்பார். இந்த நாள் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம்போல் புண்ணிய பலன்களை தரும் நாளாக புராணங்கள் போற்றுகின்றன.

இந்நாளில் துவங்கும் புதிய முயற்சிகள், அரசாங்க விஷயங்கள், முக்கிய சந்திப்புக்கள். தொழில், வியாபாரம் ஆரம்பித்தல் எல்லா சுப விஷயங்களுக்கும் பிள்ளையார் சுழி போடுதல் போன்றவை வெற்றிகரமாக முடியும். தியானம், மந்திரஜெபம், யோகா, கல்வி, கலை, பயிற்சிகள் போன்றவற்றை துவக்குவதற்கு நல்ல நாளாகும். இன்று செய்யப்படும் தானங்கள், தர்மங்கள், உதவிகள் ஒன்றுக்கு பத்தாக புண்ணியத்தை சேர்க்கும்.

வழிபாடு -பரிகாரம்

தினசரி சிவாலய வழிபாடும், சூரிய நமஸ்காரமும் நல்ல பலன் தரும். தினசரி ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் படிக்கலாம். கோதுமையில் செய்த சப்பாத்தி, கோதுமை ரவை போன்றவற்றை இல்லாதோர், நோயாளிகளுக்கு தரலாம். கோதுமை பலகாரத்துடன் பழங்கள், கீரை சேர்த்து பசுவுக்கு கொடுக்கலாம். தினசரி சூரிய காயத்ரி மந்திரம் 108 முறை சொல்லி வரலாம். ஓம் அம் நமசிவாய சூரிய தேவாய நம என்ற மந்திரத்தை 108 முறை சொல்லலாம். சூரிய தலமான ஆடுதுறை சூரியனார் கோயிலுக்கு சென்று வரலாம்.

நவதிருப்பதிகளில் திருநெல்வேலி அருகே உள்ள ஸ்ரீவைகுண்டம்  சூரியனுக்குரிய பிரார்த்தனை தலமாகும். ரத சப்தமி மற்றும் ஒவ்வொரு மாதம் வரும் வளர்பிறை சப்தமியில் பெருமாள் ஆலயங்களுக்கு சென்று பிரார்த்திக்கலாம் – ஜோதிட முரசு மிதுனம் செல்வம்

சூரியனின் அம்சங்கள் (ஆதிக்கம்)

கிழமை    :    ஞாயிறு

தேதி    :                1, 10, 19, 28.

நட்சத்திரம்    :    கிருத்திகை, உத்திரம், உத்திராடம்.

தமிழ் மாதம்    :    சித்திரை, ஆவணி

ராசி    :    சிம்மம்

உச்சம்    :    மேஷம்

நீசம்    :    துலாம்

நிறம்    :    சிவப்பு

ரத்தினம்    :    மாணிக்கம் (சிவப்பு)

தானியம்    :    கோதுமை

ஆடை    :    சிவப்பு

*ஆன்மீகதகவல்கள்* 0091-8939791843

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக